தேசிய மாம்பழ தினம் 2023: பல சுவாரஸ்ய தகவல்கள்!
இன்று தேசிய மாம்பழ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மாம்பழம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கு காண்போம்.
முக்கனிகளின் முதன்மையானது மாம்பழம். நமது நாட்டின் தேசியக் கனி அது. மாம்பழங்கள் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றியதாக கூறப்படுகிறது. உலகிலேயே அதிகப்படியான மாம்பழங்கள் இந்தியாவில் தான் விளைகின்றன. ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் டன் என்ற விகிதத்தில் மாம்பழங்கள் பயிரிடப்படுகின்றன.
மாமரங்கள் காய்ப்பதற்கு 4 முதல் 6 ஆண்டுகள் வரை ஆகும். மாமரங்கள் 150 அடி உயரம் வரை வளரக்கூடியது மற்றும் அதிகபட்சமாக 300 ஆண்டுகள் வரை பழங்களைத் தரும். மாம்பழங்களில் அளவற்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. வைட்டமின் 'சி' யை தவிர புரதம், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பிற சத்துக்களும் மாம்பழத்தில் நிறைந்துள்ளன.
பழங்களின் அரசனாக கருதப்படும் மாம்பழங்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 22ஆம் தேதி தேசிய மாம்பழ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாம்பழம் என்ற சொல் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் ‘மாங்கோ’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த மாம்பழத்தில் பல வகைகள் உண்டு. சிறிய மாம்பழத்திலிருந்து ஒரு அடிவரை நீளம் வளரக்கூடிய மாம்பழங்கள் வரை இந்த உலகில் உள்ளன. அதிலும் ஒவ்வொரு மாம்பழத்திற்கும் ஒவ்வொரு ருசியும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் மியா, சாகி, காசா, அல்போன்சா, செந்தூரம், சப்போட்டா, பங்கனபள்ளி, மல்கோவா என 100க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உள்ளன.