தேசிய தேர்வுகள் முகமை அமைப்பு சொசைட்டியாக பதிவு செய்யப்பட்ட விவகாரம் - என்டிஏ விளக்கம்!
தேசிய தேர்வுகள் முகமை அமைப்பு சொசைட்டியாக பதிவு செய்யப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், என்டிஏ விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து தேசிய தேர்வுகள் முகமை அளித்துள்ள விளக்கத்தில்,
“கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிவிப்பின் படி, 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதலின்படி, தேசிய தேர்வு முகமை (NTA) ஒரு தன்னாட்சி மற்றும் தன்னிறைவு கொண்ட முதன்மையான அமைப்பாக நிறுவப்பட்டது. இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், சங்கங்கள் (பதிவு) சட்டம், 1860ன் கீழ், 2018-ம் ஆண்டு மே 15-ம் தேதி தேசிய தேர்வுகள் முகமை ஒரு சொசைட்டியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளை நடத்த NTA- க்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, CUET (UG) மற்றும் CUET (PG) ஆகிய பல்கலைக்கழக மானியக் குழுவிற்காக தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்துகிறது.
அதேபோல மத்திய அரசு அல்லது உரிய அதிகாரம் பெற்ற மத்திய அரசின் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தான் தேர்வுகளை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. மேலும் ஒரு பொது நிறுவனமாக, தகவல் அறியும் சட்ட வரம்பிற்குள் தேசிய தேர்வுகள் முகமை அடங்கும்” என தேசிய தேர்வுகள் முகமை விளக்கமளித்துள்ளது.