நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா தொடக்கம்!
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா தொடங்கியது.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள நத்தம் மாரியம்மன் கோயில். இக்கோயிலின் முக்கிய திருவிழாவான மாசி பெருந்திருவிழா, நேற்று (பிப்.12) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று (பிப்.12), பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் நீராடி, மஞ்சள் ஆடைகள் அணிந்து, தீர்த்தக் குடங்கள் எடுத்து வந்தனர்.
முன்னதாக, அரண்மனை சந்தனக் கருப்பு கோயிலில் கூடிய பக்தர்கள், அங்கிருந்து புறப்பட்டு, மேளதாளம் முழங்க தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாகச் சென்றனர். அதன் பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, மஞ்சள் காப்பு கட்டி, தங்கள் 15 நாள் விரதத்தை தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து பிப். 16, 20, 23 ஆகிய தேதிகளில் அம்மன் மயில், சிம்ம, அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்த நாள்களில் பக்தர்கள் மாவிளக்கு, கரும்பு தொட்டில், அங்கபிரதட்சணம், அலகுகுத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.
வரும் பிப்ரவரி 27ஆம் அக்னிசட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், பிப்.28-ம் தேதி இரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு நகர்வலமாக வந்து, கோயிலை சென்றடையும். இதனுடன் திருவிழா நிறைவடையும்.