இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் நாசா!
ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லவிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவை தளமாகக் கொண்ட Axiom Space உடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வரவிருக்கும் Axiom-4 பணிக்காக இரண்டு இந்தியர்களை பிரைம் மற்றும் பேக்கப் மிஷன் பைலட்களாக ஒப்பந்தம் செய்துள்ளது. அதனடிப்படையில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, இந்தியாவின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அதன்படி, குரூப் கேப்டன் சுக்லா முதன்மை மிஷன் பைலட்டாகவும், மற்றொரு இந்திய விமானப்படை அதிகாரியான குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் பேக்கப் மிஷன் பைலட்டாகவும் இருப்பார்.
யார் இந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா?
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்தவர் குரூப் கேப்டன் ஷுபான்ஷு சுக்லா.. இவர் கடந்த 18 ஆண்டுகளாக இந்திய விமானப்படை பணியாற்றி வருகிறார். கார்கில் போரில் இந்திய வீரர்களின் வீரம் மற்றும் தியாகம் பற்றிய கதைகளைப் படித்த பிறகே, அவருக்கு ஆயுதப்படையில் சேர வேண்டும் எனத் தோன்றியதாக அவர் கூறியிருக்கிறார்.