"நரேந்திர மோடியின் ஆட்சி நீடித்து நிலைக்காது" - ஜவாஹிருல்லா
நரேந்திர மோடி 3வது முறை ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஆட்சி நீடித்து நிலைக்காது என மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் 2வது விடுதலைப் போராட்டம் என்று
சொன்னால் அது மிகையாகாது. இந்த தேர்தலில் மதசார்பின்மை ஜனநாயகத்தை காக்க வேண்டும், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி இந்தியா கூட்டணி நாடு முழுவதும் பரப்புரை செய்தது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த தேர்தலில் ஆட்சியை அமைப்பதற்கான இடங்கள் இந்தியா கூட்டணிக்கு கிடைக்கவில்லை. ஆனால் மக்கள் தெளிவாக வாக்களித்து தாமாகவே ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையை பாஜகவிற்கும் அதன் கூட்டணிக்கும் அளித்துள்ளனர்.
இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் என்ன தீர்மானிக்கப்பட்டது என்பதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இந்தியா கூட்டணி தகுந்த நேரத்தில், தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு தேச கட்சியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகின்றன.
நரேந்திர மோடி 3வது முறை ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஆட்சி நீடித்து நிலைக்காது. அவர்கள் முன்பு போல சர்வாதிகார முறையில் ஆட்சி செய்ய முடியாது."
இவ்வாறு மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.