3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இன்று (ஜூன் 9) டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலக தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும் கலந்துகொண்டனர்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹால், மோரீஷஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத், பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே, செஷல்ஸ் துணை அதிபர் அகமது அஃபிப் ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், பதவியேற்பு விழா நடைபெறும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தனர்.
உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் , உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதின் கட்கரி முன்னாள் அமைச்சர்கள் ஜெயசங்கர், நிர்மலா சீதாராமன், திருசூர் எம்பியும் கேரளா நடிகருமான சுரேஷ்கோபி ஆகியோர் விழா மேடைக்கு வருகை தந்தனர். அதேபோல், டிடிவி தினகரன் மற்றும் ஜான் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இதனைத் தொடர்ந்து, 72 அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளது. அதில் 36 பேர் இணை அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.