"நரேந்திர மோடி தனது பொறுப்பிலிருந்து விலக வேண்டும்" - சுப்பிரமணியன் சுவாமி
நரேந்திர மோடி தனது பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. இதன்படி, நடந்து முடிந்த தேர்தலில், பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாகவே பெற்றுள்ளது.
இந்த நிலையில், நரேந்திர மோடி தனது பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ''நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, மக்களவைத் தேர்தல் வெற்றி வாய்ப்புக்குத் தேவையான 272 தொகுதிகளை விட குறைவாகவே பெற்றுள்ளதால், அவர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும். சுயமரியாதையுடைய எந்த தலைவரும் தாமாக முன்வந்து ராஜிநாமா செய்வார். மற்றவர்கள் வெளியேற்றுவதற்காக காத்திருக்கமாட்டார்'' என தெரிவித்துள்ளார்.
இதற்கு பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், ''சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இதே இடத்தில் இருந்திருந்தால் அவருக்கும் இந்த கருத்தை தெரிவிப்பாரா?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, ''ஆம். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழக்கும்போது ராஜீவ் காந்தி ராஜிநாமா செய்தார். பெரும்பான்மைக்காக சிறிய கட்சிகளிடம் மன்றாடவில்லை'' என்றார்.