ஒரே நாளில் ரூ.4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தியின் 5 மாத பேரன்.. எப்படி தெரியுமா..?
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பில்லியனருமான என்.ஆர். நாராயண மூர்த்தியின் 5 மாத பேரன் ஒரே நாளில் ரூ.4.2 கோடி சம்பாதித்திருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இன்போசிஸ் நாராயண மூர்த்தி-யின் மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் மருமகள் அபர்ணா கிருஷ்ணன் தம்பதியினருக்குப் பிறந்த மகன் எக்கிரஹா ரோஹன் மூர்த்தி. தற்போது 15 லட்சம் இன்போசிஸ் பங்குகளை வைத்திருக்கிறார். இதன் பங்குச் சந்தை மதிப்பு ரூ.210 கோடி. இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் வியாழக்கிழமை தனது காலாண்டு முடிவுகளை வெயிட்ட நிலையில், முதலீட்டாளர்களை தக்க வைத்துக்கொள்ள, 2024 நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு ரூ.20 மற்றும் சிறப்பு ஈவுத்தொகையாக (special dividend) 8 ரூபாய் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒரு அறிவிப்பு மூலம் இன்போசிஸ் பங்குகள் வைத்திருக்கும் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இப்படி இன்போசிஸ் நிறுவனர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பெரும் தொகையை இந்த டிவிடென்ட் மூலம் சம்பாதிக்க உள்ளனர். எக்கிரஹா ரோஹன் மூர்த்தி வைத்திருக்கும் பங்குகளுக்கு ஈவுத்தொகை கணக்கிடப்பட்டால் சுமார் ரூ.4.2 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இன்போசிஸ் நிறுவனர்கள் மத்தியில் அதிகப்படியான பங்குகளை வைத்திருப்பது நாராயணமூர்த்தியின் குடும்பம் தான்.
இக்குடும்பத்தில் இருக்கும் அனைவருமே இன்போசிஸ் பங்குகளை வைத்திருக்கும் நிலையில் இக்குடும்பத்தின் குட்டி இளவரசனுக்கும் இந்த டிவிடெண்ட் மூலம் ஜாக்பாட் அடித்துள்ளது. நாராயணமூர்த்தி, அவரின் மனைவி சுதா மூர்த்தி, மகன் ரோஹன் மூர்த்தி, மகள் அக்ஷதா மூர்த்தி, பேரன் எக்கிரஹா ரோஹன் மூர்த்தி ஆகிய அனைவரும் இன்போசிஸ் பங்குகளை வைத்துள்ளனர்.