பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிசளித்த நாராயண மூர்த்தி!
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தனது 4 மாத பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிசளித்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி. இவர் 1981-ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் 1999-ம் ஆண்டு மார்ச் மாதம் நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இவர் 2002-ம் ஆண்டு வரை இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டார்.
கடந்த நவம்பர் மாதத்தில், நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி ஆகியோர் தங்கள் மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் அவரது மனைவி அபர்ணா கிருஷ்ணன் ஆகியோருக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து தாத்தா, பாட்டியானார்கள். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தியின் இரண்டு மகள்களுக்குப் பிறகு, மூர்த்தி தம்பதியினருக்குப் பிறந்த மூன்றாவது பேரன் இவர்.
இன்போசிஸில் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்திலிருந்து 0.36 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதாவது 1.51 கோடிக்கும் அதிகமான பங்குகள். பங்குச் சந்தையின் விதிமுறைகளுக்கு இணங்க இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது.