வனவிலங்குகளை கொல்ல திட்டமிட்டுள்ள #Namibia! ஏன் தெரியுமா?
நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, உணவுக்காக வனவிலங்குகளை கொல்ல திட்டமிட்டுள்ளதாக நமீபியா அரசு தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் வறட்சி ஏற்படுவது பொதுவானதானது. இருப்பினும், தற்போது தென்னாப்பிரிக்க நாடான நமீபியா தற்போது கடுமையான வறட்சியை சந்தித்துள்ளது. இந்த கடும் வறட்சி காரணமாக பசியால் வாடும் 14 லட்சம் மக்களுக்கு உணவளிக்க காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை உணவாக பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, நமீபியா சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமீபிய அரசியலமைப்பு சட்டத்தின்படி நாட்டிலுள்ள இயற்கை வளங்களை நாட்டுமக்களுக்கு பயன்படுத்தும் வகையில் 83 யானைகள் உள்பட 723 காட்டு விலங்குகளை கொல்லும் திட்டம் மிகவும் அவசியமானது" என்று தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுமார் 30 லட்சம் மக்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை ஜூன் மாதம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுவிலங்குகளில், யானைகளைத் தவிர்த்து, 300 வரிக்குதிரைகள், 30 நீர்யானைகள், 50 இம்பாலா என்றழைக்கப்படும் மான் வகைகள், 60 எருமைகள், 100 காட்டெருமைகள் மற்றும் 100 எலாண்ட்ஸ் (ஒரு வகை மான்) ஆகியவற்றைக் கொல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.