திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா! – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!
களக்காடு அருகே திருக்குறுங்குடியில் உள்ள அழகியநம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு 5 நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 1500 ஆண்டுகள்
பழமை வாய்ந்த அழகியநம்பிராயர் கோயில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில்
ஒன்றாக திகழும் இந்த கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு
வாய்ந்ததாகும். இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா
வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து விழா நாட்களில் தினசரி நம்பிசுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் 5ம் நாளான நேற்று (29ம் தேதி) இரவு கோலாகலமான நடைபெற்றது.
இதையொட்டி நம்பிசுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி ஆகிய 5 நம்பிசுவாமிகளும் தனித்தனியாக 5 கருட வாகனங்களில் எழுந்தருளினர். பின்னர் ரதவீதிகள் வழியாக, திருவீதி உலா வந்த 5 நம்பிகளும் இன்று (மார்ச்.30) அதிகாலை 3.30 மணியளவில் மேலரதவீதியில் மேற்கு நோக்கி எழுந்தருளி, மகேந்திரகிரி மலையை கடாஷித்து அங்கு வாழும் தேவகந்தர்வ சித்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
அப்போது நம்பிசுவாமிகளுக்கு சிறப்பு தீப ஆராதனை நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்பின் நம்பிசுவாமிகள் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். கோயில் வாசலில் திருக்குறுங்குடி ஜீயர் நம்பிசுவாமிகளை தொழுது வரவேற்றார். இதனைத் தொடர்ந்து 10 ஆம் நாள் திருவிழாவான வரும் ஏப் 3ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.