நாமக்கல் : 14 வயது மாணவன் அரசுப் பள்ளி கழிவறையில் மர்ம மரணம்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்ஐசி காலனியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் கவின்ராஜ். இவர் ராசிபுரம் சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற கவின்ராஜ், பள்ளி இடைவேளையில் கழிவறைக்கு சென்று வருகிறேன் என கூறி விட்டு சென்றிருக்கிறார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வகுப்புக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள், கவின்ராஜை தேடி கழிவறைக்கு சென்றுள்ளனர். கழிவறையில் மாணவன் மயக்கமடைந்து கிடந்துள்ளான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார், ஆய்வாளர் எஸ். சுகவனம், வட்டாட்சியர் எஸ். சரவணன் ஆகியோர் பொதுமக்களிடம் சமரசப் பேச்சு நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.
மாணவன் உயிரிழந்ததற்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் காலை உணவு அருந்தாமல் பள்ளிக்கு சென்றதால் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பள்ளியில் சக மாணவர்களுடன் ஏதாவது பிரச்னை இருந்ததா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.