நல்லகண்ணுவின் 100வது பிறந்த நாள் - திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக கனிமொழி எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு இன்று தனது 100 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் திமுக கனிமொழி எம்.பி. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
“பொதுவுடைமை சித்தாந்தத்தின் போர்வாளாக, சமரசமற்ற மக்கள் போராளியாக, எளிய வாழ்விற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களது நூற்றாண்டு பிறந்தநாளில் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன், இன்னும் பல ஆண்டுகள் தனது சமூகப் பணியைத் தொடர விழைகிறேன்” என பதிவிட்டுள்ளார்.