'ஆடுஜீவிதம்' குறித்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த நஜீப்!
ஆடுஜீவிதம் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் எழுத்தாளர் மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு நஜீப் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ளது ஆடுஜீவிதம் திரைப்படம் . இத்திரைப்படம் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்) தழுவி எடுக்கப்பட்டதாகும். இந்த நாவலை எழுத்தாளர் பென்யாமின் எழுதியுள்ளார். மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பிளஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார். கே.எஸ்.சுனில் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தை ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார். 2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது. நஜீப் கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் சுமார் 30 கிலோ எடையை குறைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நஜீப்பிற்கும் ஆடுகளுக்கும் இடையேயான அந்தரங்க விஷயங்கள் படப்பிடிப்பின்போது காட்சிப்படுத்தப்பட்டதாகவும், அக்காட்சிகள் தணிக்கை வாரியத்தால் நீக்கப்பட்டதாகவும் எழுத்தாளர் பென்யாமின் தெரிவித்திருந்தார். ஆனால் இயக்குநர் பிளஸ்ஸி ஐப் தாமஸ் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், ஆடு ஜீவிதம் நாவலில் இடம்பெற்ற பல சம்பவங்கள் படத்தில் இணைக்கப்படவில்லை என்ற கருத்துகளும் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில், எழுத்தாளர் பென்யாமின் மற்றும் இயக்குநர் பிளஸ்ஸி ஐப் தாமஸ் குறித்து பலரும் தவறான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக பேசிய நஜீப் கூறியதாவது:
“சமூக வலைதளங்களில் எழுத்தாளர் பென்யாமினையும், இயக்குநர் பிளஸ்ஸியையும் தாக்கி வரும் கருத்துக்களைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக உள்ளது. எழுத்தாளர் பென்யாமின் எனது வாழ்க்கையை பற்றி எழுதியதால்தான் நான் யாரென்றே இந்த உலகத்திற்குத் தெரியவந்தது.
இதனால் தான் என் மகனுக்கு பஹ்ரைனில் வேலையும் கிடைத்தது. இயக்குநர் பிளஸ்ஸி எனக்கு ஏதாவது பணியைப் பெற்றுத் தரவேண்டும் என நினைக்கிறார். நான்தான் அதனை மறுத்துவிட்டேன். அவர்கள் இருவரும் என்னிடம் நல்ல முறையில் தொடர்பிலிருக்கின்றனர். மற்றவர்கள் அவர்களைத் தாக்கிப் பேசுவது வேதனையாக உள்ளது.”
இவ்வாறு நஜீப் தெரிவித்தார்.