நயினார் நாகேந்திரன் பிரசார பயணம் தொடக்க விழா : பிரசார பாடல் வெளியீடு..!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் தேர்தல் பணிகளை முடிக்கி விட்டுள்ளனர். கூட்டணி பேசுவது, மக்கள் சந்திப்புகளை முன்னெடுப்பது என கட்சித்தலைவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயளாலர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தமிழ்கம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில், தமிழ்நாடு பாஜக சார்பில், அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் 'தமிழகம் தலைநிமிர; தமிழனின் பயணம்' என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.
இதற்கான தொடக்க விழா இன்று மதுரையில் நடைபெற்றது. இதில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரும், கூட்டணி கட்சித்தலைவர்களான ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, ஜி.கே.வாசன், ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், பாஜகவின் பிரசார பாடல் வெளியிடப்பட்டது. அதில், பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நயினார் நாகேந்திரன் ஆகியோர் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசிய பேச்சுக்களின் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.