நாகூர் தர்ஹாவில் இன்று சந்தனக் கூடு விழா - சிறப்பு துவாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி!
உலக புகழ்பெற்ற நாகூர் தர்ஹாவின் 467 ஆம் ஆண்டு கந்தூரி விழாவில் ஆளுநர் ரவி கலந்து கொண்டார்.
நாகூர் ஆண்டவர் தர்ஹாவின் 467ம் ஆண்டு கந்தூரி விழா என்பது கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த கந்தூரி விழாவின் முக்கிய திருவிழாவான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், ரகுபதி உள்ளிட்டோருக்கு நாகூர் தர்ஹா பரம்பரை ஆதினஸ்தர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று தர்ஹா வந்தடைந்த ஆளுநரை பாரம்பரிய முறைப்படி, தர்ஹா மணி மேடையில் அமர்ந்திருந்தபடி நகரா மேளதாளம் முழங்க நாகூர் தர்ஹா தலைமை அறங்காவலர் ஹாஜி உசேன் சாஹிப் , ஆலோசனை குழு உறுப்பினர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், நாகை எஸ்பி ஹர்ஷிங் ஆகியோர் வரவேற்றனர். பின், பெரிய ஆண்டவர் சமாதியில் ஆளுநர் இஸ்லாமியர்களோடு சிறப்பு துவா ஓதப்பட்ட நிகழ்வில் பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்கு பின் தர்ஹா வாசலில் வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில், ''467 வது கந்தூரி திருவிழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவரது நல்வாழ்வுக்கும் எனது பிரார்த்தனைகள். புனிதரின் ஆசீர்வாதங்களைப் பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பாரதத்தின் கலாச்சாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் பழமை வாய்ந்த இந்த தர்ஹா பிரதிபலிக்கிறது'' அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என எழுதினார்.
முன்னதாக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகை மாவட்ட எல்லையில் கீழ்வேளூர் புறவழிசாலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஆளுநர் வருகைக்கு முன்பாகவே காவல்துறையினர் கைது செய்தனர்.