நாகர்கோவில் நாகராஜா கோயில் தைத்திருவிழா தேரோட்டம் கோலாகலம்...!
நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தைத்திருவிழாவை முன்னிட்டு இன்று (ஜன.26) தேரோட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தை மாத திருவிழா பத்து நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தைத் திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.
திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடுகள், சிறப்பு அபிஷேகங்கள், புஷ்ப வாகனம், சிங்க வாகனம், கமல வாகனம், ஆதிசேஷ வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஒவ்வொரு நாளும் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதையும் படியுங்கள்: இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்.!
இதனைத் தொடர்ந்து 9-வது நாள் திருவிழாவான இன்று (ஜன.26) சிறப்பு பூஜைகளுக்குபின் சுவாமி தேரில் எழுந்தளுளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் தேரோட்டம்
தொடங்கியது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் எம்.பி. விஜய் வசந்த், எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பத்தாம் நாள் திருவிழாவான நாளை (ஜன.27) ஆராட்டு நிகழ்ச்சியுடன் தைத்திருவிழா நிறைவு பெற உள்ளது.