நாகூர் நாகநாத சுவாமி கோயில் பிரமோற்சவ திருவிழா - சுவாமி ஓல சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா!
நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் ஶ்ரீ நாகவல்லி சமேத நாகநாத சுவாமி மின் அலங்கார ஓல சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் நாகவல்லி சமேத நாகநாதசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் சந்திர பகவான் மற்றும் இந்திரன் நாகநாத சுவாமியை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக நம்பப்படுகிறது. இக்கோயில் பிரமோற்சவ திருவிழா கடந்த 11-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தியாகேச பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதனையடுத்து ஶ்ரீ நாகவல்லி சமேத நாகநாத சுவாமி மின் அலங்கார ஓல சப்பரத்தில், பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி நேற்று இரவு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வீதி உலா நாகநாதர் கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கிய விதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
வெகு விமரிசியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளை (ஜூன் 20) நடைபெற உள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு நாளை நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.