நாகூர் தர்ஹாவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற தர்ஹாவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உலக பிரசித்திப் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்ஹா உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் நாகூர் ஆண்டவரை வழிபாடு செய்து வருகின்றனர்.
நாகூர் ஆண்டவர் தர்ஹாவில் 467-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழாவையொட்டி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நேற்று இரவு அதிர்வேட்டுகள் முழக்கத்துடன் 5 மினராக்களில் ஒரே நேரத்தில் புனிதக் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த கந்தூரி திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் 23ஆம் தேதியன்று இரவு நடைபெறுகிறது. 24ஆம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் சன்னதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நாகூர் கந்தூரி விழாவையொட்டி மாவட்ட எஸ்.பி. ஹர்ஷ் சிங் தலைமையில், ஆயுதப்படை போலீசார், உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.