நாகை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
நாகப்பட்டினம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன்
தொடங்கியது.
நாகப்பட்டினம் முதலாம் கடற்கரை சாலையில் பழைமை வாய்ந்த புனித அந்தோணியார்
ஆலயம் அமைந்துள்ளது. சுமாா் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் ஆலயத்தின் வளாகத்தில் இருந்து துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தினை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து நாகை மறைவட்ட அதிபர் பன்னீர்செல்வம் சிறப்புத்திருப்பலி செய்து வைத்தார். தொடர்ந்து ஆலயத்தின் முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய அலங்கார தேர் பவனி வரும் 22ம் தேதி நடைபெருகிறது.