“ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நதீமும் என் பிள்ளை தான்” - பாக்.வீரர் குறித்து நீரஜ் தாய் பெருமிதம்!
“பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நதீமும் என் பிள்ளை தான்” என வெள்ளி வென்ற இந்திய வீரர் நீராஜ் சோப்ராவின் தாய் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
டோக்கியோவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதனையடுத்து இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் வெள்ளிப் பதக்கத்தை நீரஜ் சோப்ரா பெற்றார். இந்த வெற்றியை நீரஜ் சோப்ராவின் குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நீரஜ் சோப்ராவின் தாய் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமையும் புகழ்ந்து பேசியுள்ளார்.
“நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களுக்கு வெள்ளிப் பதக்கமும் தங்கத்துக்கு ஈடானதே. தங்கம் வென்றவரும் என் பிள்ளை தான். அந்த வெற்றிக்கு பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது. நீரஜ் காயமடைந்தார், காயத்துடன் அவர் பெற்றுத்தந்த இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தடகள வீரரின் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தான். எங்களுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீரஜ் வரும்போது அவருக்குப் பிடித்த உணவை சமைத்து வைப்பேன்” என்று கூறியுள்ளார்