மனைவி மீது சந்தேகப்பட்டு கொலை செய்துவிட்டு மாயமான கணவர் - காவல்துறையினர் வலைவீச்சு!
ஓசூரில் மனைவியின் நடத்தை மேல் சந்தேகப்பட்டு கட்டையால் தாக்கி கொலை செய்த கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரையடுத்த பாகலூர் அருகே உள்ள சூடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (45). இவர் பெயிண்டர் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி கல்பனா (35). இவர் ஓசூரில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ஆனந்தகுமார் தன் மனைவி நடத்தை மேல் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை மது அருந்தி வீட்டிற்கு வந்த ஆனந்தகுமார் கல்பனாவிடம் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார் கட்டையால் கல்பனா தலை மேல் தாக்கியதால் அவர் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். இதனால் கல்பனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் ஆனந்தகுமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இந்த சம்பவத்தை பற்றி தகவல் அறிந்த பாகலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உயிரிழந்த கல்பனாவின் உடலை
கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை பற்றி பாகலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஒடிய ஆனந்த குமாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மனைவியின் நடத்தை மேல் சந்தேகப்பட்டு குடிபோதையில் கொலை செய்த இச்சம்பவம் சூடாபுரம் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.