நெல்லையில் முதியவர்கள் வாழும் வீடுகளை குறிவைத்து திருடும் மர்ம கும்பல் - மடக்கிப்பிடித்த காவல்துறை!
நெல்லையில் முதியவர்கள் வாழும் வீடுகளை குறிவைத்து திருடும் மர்ம கும்பலை காவல்துறையினர் லாபகமாக பிடித்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் நம்பி. இவரது
மகன் அழகு (42). இவர் அமிர்தசரஸில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் போட் என்ற பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய பாதுகாப்புக்காக கடந்த 2019-ம் ஆண்டு 32-பிஸ்டல் வகையை சேர்ந்த துப்பாக்கியையும், அதற்குரிய 30 குண்டுகளையும் வாங்கி உள்ளார்.
இதில் அவர் சோதனை செய்வதற்காக 5 குண்டுகளை பயன்படுத்தி உள்ளார். எஞ்சிய 25 குண்டுகளையும் அவர் தன் வசம் வைத்திருந்தார். அந்த துப்பாக்கியை கடந்த மாதம் 9-ம் தேதி விடுமுறை முடிந்து பணிக்காக மீண்டும் அமிர்தசரஸ் புறப்பட்டார். அப்போது சமூகரெங்கபுரத்தில் குடியிருந்து வரும் தனது பெற்றோரிடம் இது முக்கியமான பொருள் என கூறி ஒரு பெட்டியில் தன்னுடைய துப்பாக்கி, 25 தோட்டாக்கள் மற்றும் ஒரு கத்தியை உறையில் வைத்து ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் அவற்றை கடந்த 6-ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். துப்பாக்கி, தோட்டாக்களை திருடிச்சென்ற மர்ம கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளி மதுரை சிவரங்கோட்டையை சேர்ந்த முத்துமுருகன் (40), ராகவன் (23), குமார் (24), சிவகாசியை சேர்ந்த முத்து (26), ராமநாதபுரத்தை சேர்ந்த முத்து (35) ஆகிய 5 பேர் கும்பலில் 4 பேரை கைது செய்தனர்.
நேற்று இரவு போலீசார் குற்றவாளிகளை ராதாபுரம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுத்தினர். குற்றவாளிகள் பாளையங்கோட்டை மத்திய சிறையில்அடைக்கப்பட்டனர். முக்கிய குற்றவாளியான மதுரை சிவரங்கோட்டையை சேர்ந்த முத்துமுருகனை இன்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், இந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று நடுத்தர வீடுகளையும், வயதானவர்கள் மட்டும் குடியிருக்கும் வீடுகளையும் நோட்டமிட்டுள்ளனர்.
பின்பு அந்த வீடுகளுக்கு சென்று கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதற்காக குடை பழுது பார்த்தல், கேஸ் அடுப்புகள் பழுது பார்த்தல் போன்ற தொழில் செய்வது போல் கிராமங்களுக்கு சென்று வீடு வீடாக ஏறி இறங்கி நோட்டமிட்டுள்ளனர். பின்னர் வயதானவர்கள் இருக்கும் வீட்டில் கொள்ளையடிப்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ராணுவ வீரரின் துப்பாக்கி, தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த கும்பல் அதே நாளில் 95 வயது மூதாட்டியின் கம்மலை பறித்து சென்றதும் தெரியவந்தது. அவர்கள் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.