மீட்பு பணிகளுக்கு உதவ தற்காலிக போர் நிறுத்தம் - மியான்மர் ராணுவ அரசு அறிவிப்பு!
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த மார்ச் 28ம் தேதி அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, அடுத்தடுத்து 6 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.
மியான்மரின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,003 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,500 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, மியான்மரில் ராணுவ அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே கடும் மோதல்கள் நடந்து வருகின்றன.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவ ஆட்சிக்குழுவிற்கும், நாடு முழுவதும் உள்ள இனப் போராளிகள் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, மியான்மர் ராணுவம் நிலநடுக்க நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற சீன செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.
நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையிலும் மியான்மர் ராணுவம் விமானத்தில் சென்று கிளர்ச்சியாளர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மியான்மர் ராணுவ அரசுக்கு ஐ.நா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நிலநடுக்க மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக மியான்மர் அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 22 ஆம் வரை இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்றும் அந்நாட்டு ராணுவ அரசு தெரிவித்துள்ளது.