மியான்மர் நிலநடுக்கம் : 1000திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிப்பு!
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நேற்று (மார்ச் 28) அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்தது. புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் ஏராளமான ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்றது.
இந்த நிலையில், மியான்மரின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 1000 திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 2,000 திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அதேபோல், தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நிலநடுக்கத்தால் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், 47 பேரின் நிலை குறித்து தகவல் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து இந்திய பயணிகள் பலர் விமானம் மூலம் இன்று டெல்லி வந்தடைந்தனர். அந்த பயணிகள் பலரும், நிலநடுக்கம் ஏற்பட்ட அன்று பாங்காக்கில் உணவு, தண்ணீர், கால் டாக்ஸி கிடைக்காமல் தாங்கள் மிகுந்த சிரமப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மியான்மர், தாய்லாந்தில் (மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
1800 309 3793
91 80690 09901
91 80690 09900
ஆகிய எண்களில் தொடர்புகொள்ள அயலகத் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் மேற்கண்ட நாடுகளில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.