மியான்மர் நிலநடுக்கம்: 10 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் - உலக சுகாதார அமைப்பு தகவல்!
மியான்மரில் கடந்த மார்ச் 28ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக மியான்மர் கடும் பாதிப்பை சந்தித்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன.
இதனிடையே நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 2 ஆயிரத்து 719 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 4 ஆயிரத்து 521 பேர் காயமடைந்துள்ளதாகவும், 441 பேர் மாயமாகி உள்ளதாகவும் மியான்மரின் ராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு இடங்களில் கனரக எந்திரங்கள் இல்லாததால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தை மற்றும் கர்ப்பிணி பெண் உள்பட 4 பேரை 60 மணி நேரத்துக்கு பிறகு சீன மீட்புப் பணியாளர்கள் குழு மீட்டுள்ளது.
இந்த நிலையில் மியான்மரில் நிலநடுக்கத்தால் தண்ணீர் விநியோகம், சுகாதார உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சுவாச தொற்றுகள், தோல் நோய்கள், டெங்கு காய்ச்சல் போன்ற நோய்க் கிருமிகளால் பரவும் நோய்கள், தட்டம்மை போன்ற தடுப்பூசி மூலம் தடுக்கக் கூடிய நோய்கள் ஆகியவற்றுக்கான பாதிப்பு அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.