"எனது வருகை சுமையாகிவிடக்கூடாது" - வெள்ள பாதிப்பை பார்வையிடவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ஆந்திர துணை முதலமைச்சர் #PawanKalyan விளக்கம்!
ஆந்திராவில் வெள்ள பாதிப்பை பார்வையிடவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு அம்மாநில துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண் விளக்கம் அளித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கனமழையால் மாநிலத்தின் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள்.
மழை வெள்ளத்தில் சிக்கி சுமார் 4½ லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். மீட்கப்பட்டவர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்குவதாக ஆந்திரா துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
இதனிடையே, பவன் கல்யாண் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிடவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. அதற்கு பவன் கல்யாண் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “நிவாரண பணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் வெள்ள பாதிப்புகளை பார்வையிடவில்லை. பாதிப்புகளை பார்க்க வேண்டுமென விரும்பினாலும் எனது வருகை சுமையாகிவிடக்கூடாது. பேரிடர் காலங்களில் குற்றச்சாட்டுகளைவிட பொதுசேவை செய்வதே முக்கியம்“ என தெரிவித்தார்.