"உங்களுக்காக என் வீடு மற்றும் அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும்" - வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் #PriyankaGandhi பேச்சு!
”உங்களுக்காக என் வீடு மற்றும் அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும்” என வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பிரியங்கா காந்தி எம்பி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு கடந்த நவம்பர் 13-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 62.39% வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டது. வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் 6,22,338 வாக்குகள் பெற்ற நிலையில் 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி அமோக வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி 2,11,407 வாக்குகளுடன் 2வது இடமும், பாஜகவின் நவ்யா 1,09,939 வாக்குகள் பெற்று 3வது இடமும் பிடித்தனர்.
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, மக்களவையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நவ.28 அன்று எம்.பி.,யாக பதவியேற்றார். கேரள மாநிலத்தின் பாரம்பரிய உடையான கசவு சேலை அணிந்தும், இந்திய அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்திவாறும் அவர் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரியங்கா காந்தி இன்று வயநாடு வருகை தந்தார். வயநாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது..
“உங்களிடம் இருந்து பாடம் கற்கவே நான் இங்கு வந்துள்ளேன். உங்கள் பிரச்சனைகளை ஆழமாகப் புரிந்து கொள்ள வந்துள்ளேன் நான் உங்கள் வீட்டிற்கு வருவேன், உங்களை சந்திப்பேன். எனது வீடு மற்றும் அலுவலகத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்.
உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும், உங்களுக்கான வலுவான எதிர்காலத்தை உருவாக்கவும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன். என்னை எம்.பி. ஆக்கி, உங்கள் அன்பைக் காட்டி, உங்கள் ஆதரவை அளித்து உங்களுக்கு மனமார நன்றி. அதேபோல தேர்தல் பிரச்சாரத்தில் எனக்கு ஆதரவளித்த கேரளாவில் உள்ள அனைத்து காங்கிரஸ் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் செய்த வளர்ச்சிப் பணிகளுக்காக எனது சகோதரர் ராகுல் காந்திக்கும் நன்றி தெரிவிக்கிறேன். அவர் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையை என் மீது வைத்துள்ளீர்கள் என்பதை இந்த தேர்தல் வெற்றி உணர்த்துகிறது” என்று கூறினார்.