For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இந்தியாவை 3-ஆவது பொருளாதார நாடாக மாற்றுவதே இலக்கு!" - பிரதமர் மோடி

05:46 PM Jul 09, 2024 IST | Web Editor
 இந்தியாவை 3 ஆவது பொருளாதார நாடாக மாற்றுவதே இலக்கு     பிரதமர் மோடி
Advertisement

இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக மாற்றுவதே எனது இலக்கு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியா, ரஷ்யா இடையே இதுவரை 21 வருடாந்திர உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரு நாடுகளிலும் ஒன்றுவிட்டு ஒன்றாக இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன. கடைசியாக, கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் இந்திய-ரஷ்யா உச்சி மாநாடு நடைபெற்றது. ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின் இந்தியாவுக்கு வந்திருந்தார். அதன்பின் உச்சி மாநாடு நடைபெறவில்லை.

இந்த சூழலில் இந்தியா – ரஷ்யா இடையிலான 22-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷ்ய அதிபா் விளாதிமீர் புதின் விடுத்த அழைப்பின்பேரில் இரண்டு நாட்கள் பயணமாக பிரதமா் மோடி நேற்று (ஜுலை 8) ரஷ்யா சென்றடைந்தார். மாஸ்கோ விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினின் விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதனையடுத்து, இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் இரு நாட்டுத் தலைவர்களும் இன்று (ஜுலை 9)  பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்த நிலையில், மாஸ்கோவில் புலம்பெயர்ந்த இந்திய மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜுலை 9)  உரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது,

“மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு முதல்முறையாக புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் உரையாடுகிறேன்.  நான் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. நான் 3 மடங்கு வலிமை மற்றும் 3 மடங்கு அதிக வேகத்தில் பணியாற்றுவேன் என்று சபதம் எடுத்திருந்தேன்.

இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக மாற்றுவதே எனது இலக்கு. ஏழைகளுக்கு மூன்றாவது கட்டமாக 3 கோடி வீடுகள் வழங்கப்படவுள்ளது. 3 கோடி கிராம பெண்களை லட்சாதிபதி ஆக்குவதே அரசின் இலக்கு. இந்தியாவில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் ஆண்டு வருமானத்தை ரூ.1 லட்சமாக மாற்றுவோம்.

உலகில் வேறு எந்த நாடும் சென்றடைய முடியாத நிலவின் பகுதிக்கு, சந்திரயானை வெற்றிகரமாக அனுப்பியது இந்தியா.  நம் நாடு டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகுக்கு நம்பகமான மாதிரியை வழங்குகிறது.  உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழலைக் கொண்டுள்ளது.

2014ல் முதல்முறையாக பதவியேற்ற போது இந்தியாவில் 100 ஸ்டார்ட் அப் மட்டுமே இருந்தது, ஆனால் தற்போது லட்சக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன. பல்வேறு காப்புரிமைகளை தாக்கல் செய்தும், ஆய்வுக் கட்டுரைகளை பதிவு செய்தும் சாதனை படைக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது” என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement