“குடும்ப பின்னணி எந்த வகையிலும் திரை வாழ்க்கைக்கு உதவவில்லை!” - சித்தார்த்த மல்லையா ஆதங்கம்!
தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்த மல்லையா, தனது பின்னணி மற்றும் குடும்பப் பெயர் தனது நடிப்புக்கு எந்தவகையிலும் உதவவில்லை என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றவர் விஜய் மல்லையா. இவர் இப்போது பிரிட்டனில் புகலிடம் கோரியுள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சி தனியாக நடந்து வரும் நிலையில், அவரது மகன் சித்தார்த்த மல்லையாவுக்கு கடந்த மாதம் லண்டனில் வெகு சிறப்பாகத் திருமணம் நடந்தது.
சித்தார்த்த மல்லையா டீவி சீரிஸில் நடித்திருப்பதோடு 2016-ஆம் ஆண்டு பிராமன் நமன் என்கிற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். அதன்பிறகு அவர் திரைத்துறையில் பெரிதாக சோபிக்கவில்லை. அதோடு, அண்மையில் புத்தகம் ஒன்றையும் அவர் வெளியிட்டு தன்னை ஒரு எழுத்தாளராகவும் அடையாளப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், தனது திரைப்பயணம் குறித்து மனம் திறந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த பேட்டியில் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்த மல்லையா தெரிவித்த கருத்துகளாவது:
“மல்லையா குடும்ப பின்னணி உதவவில்லை”:
எனது குடும்ப பின்னணி எனது நடிப்பு வாழ்க்கையிலோ எனது பிற வளர்ச்சிகளிலோ எந்த வகையிலும் உதவவில்லை. பல வருடங்களாக நடிப்பில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற நோக்கோடு பல ஆடிசன்களில் பங்கேற்று வருகிறேன். ஆனால் இதை யாரும் பார்த்ததில்லை. ஆனால் நான் ஒரு தோல்வியுற்ற நடிகன் என்பதை பத்திரிகைகள் எழுதுவதியே அனைவரும் பார்க்கின்றனர். அந்த எழுத்துகளின் பலன்கள் தான் எனக்கு கிடைக்கிறது. திரைக்குப் பின்னால் நடக்கும் போராட்டத்தை மக்கள் பெரும்பாலும் பார்ப்பதில்லை. அனைவரும் எனது குடும்ப பின்னணி எனது வளர்ச்சிக்கு உதவுவதாக நினைக்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. மக்கள் அதை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு சித்தார்த்த மல்லையா தெரிவித்தார்.