"என் கலையும் கடமையும்..." - விமர்சனங்களுக்கு பதிலளித்த மாரி செல்வராஜ்
மீட்புப் பணிகளில் ஈடுபட்டதற்காக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் X தளத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்களுடன் இயக்குநர் மாரி செல்வராஜும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். மீட்புப் படையினருடன் இணைந்து நூற்றுக்கணக்கான மக்களை மாரி செல்வராஜ் மீட்டார்.
இதையும் படியுங்கள் : வீட்டைச் சுற்றிலும் வெள்ளம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பின் மீட்பு..!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ், தனது X தள பக்கத்தில், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல... நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என்று பதிவிட்டுள்ளார்.