Bigg Boss 8 டைட்டிலை தட்டி தூக்கிய முத்துக்குமரன்... பெற்ற பரிசுகள் என்ன?
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6ம் தேதி கோலகலமாக தொடங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர். 100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று (ஜன.19) நடைபெற்றது. இதில் ஆரம்பத்தில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதி கட்டத்திற்கு 5 போட்டியாளர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
இறுதி கட்டத்தில் நுழைந்த 5 போட்டியாளர்களில் நேற்று கிராண்ட் பினாலேவில் முதல் ஆளாக ரயான் எலிமினேட் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து 4வது இடம் பிடித்த பவித்ரா வெளியேறினார். இறுதியாக பிக் பாஸிடம் இருந்து விடை பெற்றுக் கொண்ட 3 டாப் போட்டியாளர்களான முத்துக்குமரன், சௌந்தர்யா மற்றும் விஜே விஷால் மூன்று பேரும் நேரடியாக பைனல் நடந்த மேடைக்கு வந்தனர்.
அப்போது அங்கிருந்த முன்னாள் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மூன்று பேரையும் வரவேற்றனர். பிறகு மேடையில் மூன்றாம் இடம் பிடித்த விஷாலை விஜய் சேதுபதி எலிமினேட் செய்தார். அடுத்ததாக சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் இருவர் மட்டுமே இருந்த நிலையில் அவர்களில் அதிகமாக வாக்குகள் பெற்ற முத்துக்குமரனை கையை உயர்த்தி வெற்றி பெற்றதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.
இதன்மூலம், முத்துக்குமரன் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார். அவருக்கு கோப்பையை வழங்கி தன்னுடைய வாழ்த்துக்களை விஜய் சேதுபதி தெரிவித்தார். பிறகு முத்துக்குமாரனுக்கு 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
பிக் பாஸ் வீட்டில் அதிக முறை கேப்டனாக இருந்த போட்டியாளர்களுக்கு புல்லட் பைக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த பைக்கையும் முத்துக்குமரன் வென்றார். இது தவிர பணப்பெட்டி டாஸ்க்கில் முத்துக்குமரன் வெற்றி பெற்ற ரூ.50,000 அவருக்கு வழங்கப்பட்டது.
முத்துக்குமாரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதற்காக ஒரு நாளைக்கு ரூ.10,000 சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. அதன் மூலம் அவருக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த 105 நாட்களுக்கும் சேர்த்து 10 லட்சத்து ஐம்பதாயிரம் சம்பளமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.