Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முத்தூட் பெயரில் நடந்த மோசடியில் எத்தனை பேர் பாதிப்பு? புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

12:19 PM Mar 15, 2024 IST | Web Editor
Advertisement

முத்தூட் நிதி நிறுவன பெயரில் மோசடியில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Advertisement

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புதூர் ஊத்துமலை பகுதி பொதுமக்களிடம்,  தங்களிடம்
உள்ள 10 பவுன் நகைகளை முத்தூட் நிதி நிறுவனத்தில் அடகு வைத்தால்,  கூடுதலாக
வட்டி கிடைக்கும் என்றும்,  ரூ.10 ஆயிரம் போனஸ் வழங்குவோம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.  மேலும் சேமிப்பு திட்டத்தில் நகைகளை வைத்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்றும் கூறி முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனத்தினர் நகைகளை பெற்று மோசடி செய்ததாக ஏராளமானவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகார்களின்பேரில் ஊத்துமலை போலீசார் வர்ஷா,  கலைச்செல்வி,
முத்தமிழ்செல்வி,  அந்தோணியம்மாள்,  வெள்ளைதுரை,  காளீஸ்வரி,  முத்தூட் நிறுவன
மேலாளர்கள் இளவரசன்,  இமானுவேல்,  முத்தூட் நிறுவன ஆடிட்டர் கண்ணன் ஆகியோர்
மீது 1.2.2024 அன்று வழக்கு பதிவு செய்தனர்.  இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு முத்தமிழ் செல்வி,  அந்தோணியம்மாள்,  வெள்ளதுரை,  காளீஸ்வரி ஆகிய 4 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி,  பொதுமக்களிடம் ஆசைவார்த்தை கூறி, அவர்களின் நகைகளை பெற்று மோசடி செய்வதாக முத்தூட் நிறுவனத்தின் மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளன.  எனவே இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல காவல்துறை தலைவர் (IG )உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில் இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது தென்மண்டல ஐ.ஜி. சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  அதில்,
மதுரை,  நெல்லை,  தென்காசி,  தூத்துக்குடி,  விருதுநகர்,  சிவகங்கை,  ராமநாதபுரம்,
தேனி,  திண்டுக்கள் ஆகிய 10 மாவட்டங்களில் முத்தூட் நிதி நிறுவனத்தினர் மற்றும்
அவர்களின் ஏஜெண்டுகள்,  மாதந்தோறும் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி,
பொதுமக்களின் ஏராளமான நகைகளை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.  முத்தூட்
நிதி நிறுவன கிளைகளின் 7 வழக்கில் மட்டும் மொத்தம் ரூ.3 கோடியே 64 லட்சம்
மதிப்புள்ள 9 கிலோ தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டு உள்ளன.  இதுதொடர்பான
புகார்களின் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் 2 வழக்குகள்,  தூத்துக்குடியில் 2
வழக்குகள், தென்காசியில் 3 வழக்குகள் என 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என
கூறப்பட்டு இருந்தது.

பின்னர் அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குறிஞர் பா.நம்பிசெல்வன் ஆஜராகி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நபர்களிடம் நகைகளை மோசடி செய்த வழக்கின்
அடிப்படையில் முத்தூட் நிதிநிறுவனத்துக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்யும்படி
மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை
செய்யப்பட்டு உள்ளது.

இதுபோல பல்வேறு மாவட்டங்களில் முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனத்தினர் ஏராளமான
நகை மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.  ஓய்வு பெற்ற போலீசாரும் இந்த
மோசடிக்கு துணையாக இருந்துள்ளனர்.  அப்பாவி பொதுமக்கள் தங்களின் வாழ்நாள்
சேமிப்பை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.  எனவே மனுதாரர்களின்
முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி தண்டபாணி,  அப்பாவி பொதுமக்களின் நகைகளை பெற்று முத்தூட் பினான்ஸ் மற்றும் முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. எனவே மனுதாரர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை
வரம்பிற்கு கீழ் வரும் மாவட்டங்களில் இந்த நிதி நிறுவனம் மோசடி குறித்து
மாவட்ட காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இணைந்து விசாரணை நடத்த
வேண்டும்.  விசாரணையில் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்தால்
அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என கூறிய நீதிபதி
முத்தூட் நிதி நிறுவனத்தின் மீதான மோசடி நடவடிக்கைகளால் எவ்வளவு பேர்
பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களின் புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள்
என்னென்ன?  முத்தூட் நிதி நிறுவனத்தினருடன் கூட்டு சேர்ந்து மோசடி செய்தவர்கள்
யார்?  யார்? இந்த வழக்குகளில் எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை உள்ளிட்டவை
குறித்து போலீசார் ஜூன் மாதம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என
உத்தரவிட்டார்.

Tags :
ArrestHigh courtinvestigationjewels fraudMuthoot Financenews7 tamilnews7 tamil update
Advertisement
Next Article