முத்தமிழ் முருகன் மாநாடு - கவனத்தை ஈர்த்த சிறுமி தியா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் முருகன் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடி, அனைவரது கவனத்தையும் ஈர்த்த சிறுமி தியா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று கோலாகலமாக தொடங்கியது. இம்மாநாடு நாளையும் நடக்கிறது. இந்நிலையில் மாநாட்டில் கலந்துகொண்டு முருகன் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் சென்னையைச் சேர்ந்த 7வயது சிறுமி தியா. குழந்தை தியாவின் பாடல் பொதுமக்களையும், முருக பக்தர்களையும் வெகுவாக கவர்ந்தது.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து சிறுமி தியா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அவர் தெரிவித்ததாவது;
“3 வயதுமுதல் பாடல் பாடி வருகிறேன். தற்பொழுது எனக்கு 7 வயதாகிறது. 50க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பங்கேற்றுள்ளேன். பொதுவாக என்னை அனைவரும் குட்டி தேச மங்கையர்கரசி எனக் கூறுவர். இன்று நான் பாடியதும், ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசியே என்னை பாராட்டியது என்னால் மறக்க முடியாது. சுகிசிவம் அய்யாவின் பேச்சை கேட்காமல் நான் தூங்கவே மாட்டேன். அவரும் இன்று என்னைப் பாராட்டினார். இவை அனைத்தையும் முருகன் அருள் என நினைத்துக் கொள்கிறேன்.
பெரிய பெரிய ஆன்மிக சொற்பொழிவாளர்கள் பங்கேற்ற மேடையில், தனக்கும் ஒரு வாய்ப்பளித்த, முத்தமிழ் முருகன் மாநாட்டை சிறப்பாக நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் நன்றி” என தெரிவித்தார்.