“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்... எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கக் கூடாது” - அகில இந்திய முஸ்லிம் ஜமாத்!
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் நடிகர் விஜய் இடமிருந்து தள்ளி இருக்க வேண்டும் என மதகுரு ஷாபுதீன் ரஸ்வி தெரிவித்துள்ளார். அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவரும், தாருல் இஃப்தாவின் தலைமை முஃப்தியுமான மௌலானா ஷாபுதீன் ரஸ்வி பரேல்வி, தவெக தலைவர் விஜய் குறித்து ஃபத்வா எனும் நோட்டீஸை வெளியிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக பேசி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில்,
விஜய் முஸ்லிம் விரோதி என்றும், அவரது பின்னணி மற்றும் கடந்த கால நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு எதிரான பல நிகழ்வுகளை பிரதிபலிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். மது அருந்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் மற்றும் சமூக விரோத சக்திகளை இஃப்தார் விருந்துக்கு அழைப்பது அனுமதிக்க முடியாதது மற்றும் பாவம் என்று இஸ்லாமிய சட்ட விதிகள் கூறுகிறது.
அப்படி இருக்கையில் சென்னையில் நடந்த இஃப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டார். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இஃப்தார் விருந்துக்கு விஜய் அழைத்து வந்திருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அத்தகைய நபர்களை நம்ப வேண்டாம்; நிகழ்வுகளுக்கு அவர்களை அழைப்பதைத் தவிர்க்க வேண்டும்; அவர்களிடமிருந்து தூரத்தை கடைப்பிடிக்கவும் என அவர் வெளியிட்டுள்ள ஃபத்வாவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் திரைப்பட தொழிலுக்குப் பிறகு அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விஜய் முஸ்லிம் உணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்று மௌலானா ஷாபுதீன் ரஸ்வி பரேல்வி கூறியுள்ளார்.
“விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் முஸ்லிம்கள் மற்றும் முழு இஸ்லாமிய சமூகத்தையே தீவிரவாதம் மற்றும் வன்முறையுடன் தொடர்புப்படுத்தி காட்டியுள்ளார். இப்படியான படங்கள் மூலம் இஸ்லாமியர்கள் மீது தவறான படிமம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு செய்துவிட்டு விஜய் இஸ்லாமியர்களின் மத உணர்வை பயன்படுத்த முயல்கிறார்” என தெரிவித்துள்ளார்.
ऑल इंडिया मुस्लिम जमात के राष्ट्रीय अध्यक्ष और दारुल इफ्ता के चीफ मुफ्ती मौलाना शहाबुद्दीन रजवी बरेलवी ने @TVKVijayHQ के अध्यक्ष @actorvijay के बारे मे पूछे गये एक सवाल के जवाब में फतवा जारी किया. pic.twitter.com/ucQIskPp55
— Maulana Shahabuddin Razvi Bareilvi (@Shahabuddinbrly) April 16, 2025
சமீபத்தில் விஜய் நடத்திய இஃப்தார் விருந்தில், இஸ்லாமிய கொள்கைகளை மீறும் நபர்களை அழைத்ததன் மூலம் இஃப்தார் மற்றும் ரமலானின் புனிதத்தை அவர் புறக்கணித்ததாக மௌலானா பரேல்வி குறிப்பிட்டார்.