கோயில் கட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்! - திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!
திருப்பூர் அருகே இந்துக்கள் கோயில் கட்ட முஸ்லிம்கள் இடத்தை தானமாக வழங்கிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வசித்து வரும் நிலையில், இப்பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த பள்ளிவாசல் உள்ளது.
ஆனால் இந்துக்கள் வழிபாடு செய்ய கோயில் இல்லாத நிலையில் கோயில் ஒன்று கட்ட வேண்டும் என எண்ணிய மக்கள் அதற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலையில் நிலம் தேடி வந்தனர். அப்பகுதி இந்துக்கள் கோயில் கட்ட இடம் இல்லாமல் தேடி வருவதை அறிந்த அப்பகுதி முஸ்லிம்கள் ஆர்.எம்.ஜே. ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை கோயில் கட்ட தானமாக வழங்கினர்.
இதையும் படியுங்கள் : பராமரிப்பு பணிகள் : சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே நாளை ரயில்கள் இந்த நேரத்தில் இயங்காது!
இந்துக்களுக்கு கோயில் கட்ட முஸ்லிம்கள் தங்களது நிலத்தை தானமாக வழங்கியது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. இதையடுத்து அந்த இடத்தில் கோயில் கட்டும் பணி நிறைவடைந்த நிலையில், கடந்த 17ம் தேதி கோயில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதற்காக முஸ்லிம்கள் பள்ளிவாசலில் இருந்து 7 தட்டுகளில் சீர்வரிசை எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.
அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் முஸ்லிம்கள் சார்பில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.