இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர் ரகுமான். இவர் கடந்த 1992ம் ஆண்டு வெளியான 'ரோஜா' படத்தின் மூலம் சினிமா துறையில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த ஏ.ஆர்.ரகுமானுக்கு அப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் கிடைத்தது. ரோஜா படத்தின் வெற்றிக்கு பின்னர் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என உலகளவில் தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்றளவும் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப், ஜெயம் ரவியின் 'ஜீனி' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இதுதவிர இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று (மார்ச் 16) திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனடியாக அவரது குடும்பத்தினர் ஏ.ஆர்.ரகுமானை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதயத்திற்கு செல்லும் இரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்க ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.