தமிழ்நாட்டின் #NewChiefSecretary முருகானந்தம்! யார் இவர்?
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
2021-ம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் மத்திய அரசுப் பணியில் இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். பின்னர், தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு ஓய்வு பெற்றதால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஷிவ் தாஸ் மீனாவுக்கு தலைமைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
ஓராண்டுக்கும் மேலாக தலைமை செயலாளராக உள்ள ஷிவ்தாஸ் மீனாவின் பணிக்காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா, ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலாளர் யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவு வந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் இன்று நியமிக்கப்பட்டு உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
யார் இந்த முருகானந்தம்?
- சென்னையை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான என்.முருகானந்தம் 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி.
- 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர்
- ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளர், தொழிற்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
- மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் தயாரிப்பில் நிதித்துறை செயலாளராக முருகானந்தம் முக்கிய பங்களிப்பை அளித்திருந்தார்.
- கடந்த ஆண்டு மே மாதம் முதலமைச்சரின் முதன்மைச் செயலராக இருந்த உதயச்சந்திரன் நிதித் துறைச் செயலராக மாற்றப்பட்ட போது, நிதித்துறைச் செயலராக இருந்த என்.முருகானந்தம் முதலமைச்சரின் முதன்மை தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
- இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.