“முருகன் மாநாட்டை சனாதனத்தோடு ஒப்பிட இயலாது” - அமைச்சர் மனோ தங்கராஜ் #News7Tamil -க்கு பேட்டி!
முருகன் மாநாட்டை சனாதன மாநோட்டோடு ஒப்பிட இயலாது எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தில் நியூஸ் 7 தமிழுக்கு பிரேத்யேக பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
“சனாதன எதிர்ப்பு மாநாட்டிற்கும், முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு எந்த முரண்பாடும் இல்லை. நாங்கள் எதிர்க்கும் சனாதனம் என்பது ஆரிய சனாதனம். சாதிய கட்டமைப்பை கட்டமைத்து, அதை வைத்து மக்கள் மத்தியில் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கிய அந்த சாதிய கட்டமைப்பை தான் எதிர்க்கிறோம். அதற்கு தான் மாநாடு. மறுபுறம் தமிழ் சமூகத்தின் சனாதனம் என்பது தாழ கிடப்பாரை தற்காற்கும் சனாதனம்.
இதை நாங்கள் என்றும் எதிர்த்தது அல்ல. முருகன் மாநாடு என்பதை அதனுடன் ஒப்பிட முடியாது. இது தமிழ் கலாச்சாரம், தமிழ் நாட்டு மக்களின் வழிபாட்டு உணர்வுகளை நாம் எடுத்து வைக்கும் மாநாடு. இதையும், அவர்கள் பேசும் சனாதனத்தையும் ஒப்பிட எந்த வாய்ப்பும் இல்லை. தமிழ் என்று வருகிற நேரத்தில் ஆன்மிகத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழில் பல இலக்கியங்கள் உள்ளன திருவாசகம், திருமந்திரம். இதை திமுக எதிர்க்கவில்லையே. தமிழ் இலக்கியத்தை பிரித்து பேசவில்லையே. அதை ஏன் அவர்கள் பிரித்து பேச வேண்டும். எனவே தமிழிசை பேசும் கருத்தை ஏற்று கொள்ள வேண்டியது அல்ல.அவர் கூறுவது தவறான கருத்து. திமுகவின் கொள்கைகளை பற்றி அண்ணன் சீமான் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
எங்கள் இயக்கத்தின் அடிப்படை கொள்கை, பாஜவின் கொள்கைக்கு எதிரானது. சீமானுக்கு திமுகவின் கொள்கையும் தெரியவில்லை. பாஜகவின் செயல்பாடும் தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.