நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் - WJUT கண்டனம்...!
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளராக நேசப்பிரபு கடந்த ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பல்லடம் மற்றும் சூலூர் பகுதியில் நடைபெறும் குற்றங்களை துணிச்சலாக ஆவணங்கள் மற்றும் காட்சிகளை திரட்டி செய்தியை பதிவு செய்து வந்தவர் நேசப்பிரபு. பல்வேறு செய்திகளின் மூலம் அரசியல் கட்சியினருக்கும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் துணிச்சலாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் என்பதால் பல்வேறு தரப்பிலிருந்தும் மிரட்டல்கள் இருந்து வந்தது.
இந்த நிலையில், நேற்று மதியம் முதல் காமநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டை நோட்டமிட்டு காரில் வந்த கும்பல் செய்தியாளர் நேசப்பிரபு குறித்து விசாரித்துள்ளனர். குறிப்பாக கிருஷ்ணாபுரம் பிரிவு பகுதியில் உள்ள பேக்கரி, செல்போன் கடை மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் தன்னை பற்றி மர்ம கும்பல் விசாரிப்பதை அறிந்து கொண்ட செய்தியாளர் நேசப்பிரபு இது தொடர்பாக உடனடியாக திருப்பூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், அருகிலுள்ள காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
நான்கு மணி நேரத்திற்கு மேல், தொடர்ச்சியாக தான் சுற்றிவளைக்கப்பட்டதை காவல்துறையிடம் பதிவு செய்தும், காவல்துறை அலட்சியம் காட்டியுள்ளது. மேலும் தொலைபேசியில் பேசும்போது, மர்ம கும்பல் வந்த காரில் பதவி எண் இல்லை, வாகனத்தின் நிறம், குற்றவாளிகள் குறித்த தகவல்களை போலீசார் கேட்க, நேசபிரபுவும் தொடர்ச்சியாக தகவல்களை பதிவு செய்துள்ளார். அதேபோன்று காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திலிருந்து தொடர்பு கொண்ட காவலர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் மனு தருமாறு அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளார்.
இரண்டு கைகள் மற்றும் ஒரு இடது கால், முதுகு மற்றும் தலை என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டால் படுகாயமடைந்த நேசபிரபு ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த நேச பிரபுவை மீட்ட பங்க் ஊழியர்கள் மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நேசபிரபுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவசர சிகிச்சை அறையில் வைத்து நேசப்பிரபுவுக்கு தொடர்ச்சியாக நேற்று இரவு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் செய்தியாளர் வெட்டப்பட்டுள்ள நிலையில் ஐந்து இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதனை சரி செய்ய மருத்துவர்கள் போராடி வருகின்றனர். இதனிடையே சுமார் நான்கு மணி நேரமாக காவல் துறையுடன் நேசபிரபு நடத்திய உரையாடல்கள் அவரது செல்போனில் பதிவாகியுள்ள நிலையில், தன்னை சுற்றிவளைத்து தனக்கு உயிருக்கு ஆபத்து என ஒருவர் கூறியும் சட்டம் ஒழுங்கில் காவல்துறை மெத்தனம் காட்டி உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பத்திரிகை சங்கங்களும், அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து
வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. WJUT வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :
“நேசபிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது தமிழ்நாடு அரசு பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் மிகவும் அலட்சியமாக செயல்பட்ட காவலர்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்” என WJUT சங்கம் வலியுறுத்தியுள்ளது.