நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம் - தென்காசி, வேலூரில் பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீதான கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து, தென்சாசி, வேலூரில் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் :
இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது;
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் செயல்களை குறித்து செய்தி வெளியிட்ட பல்லடம் தாலுகா நியூஸ் 7 சேனல் செய்தியாளர் நேசபிரபு என்பவரை நேற்று இரவு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி, கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். களத்தில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை அரசும், காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் இந்த ஆர்பாட்டத்தின் மூலம் வலியுறுத்துகிறது.
சமுக விரோத கும்பல்கள் பத்திரிகையாளர்களையும், ஊடகவியலாளர்களை தாக்கும் அவலம் தொடர்வது ஊடக சுதந்திரத்திற்கு பேராபத்து என்பதால், இவர்களை கடுமையான சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தென்காசி பத்திரிகையாளர் மன்றத்தில், மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமையில் முத்துச்சாமி மாவட்ட கௌரவ தலைவர், S.ராஜேந்துரன் மாவட்ட தலைவர், கே.எஸ்.கணேசன் மாவட்ட பொருளாளர், இராமலிங்கம் மாவட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை தாக்கிய குண்டர்களை விரைவாக கைது செய்து 307 வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் எனவும், கடமையை துச்சம் என தவறவிட்ட திருப்பூர் மாவட்ட காவல்துறையை கண்டித்தும் குடியாத்தம் பத்திரிகையாளர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.