For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் - மாநிலம் முழுவதும் ஒலித்த கண்டன குரல்கள்!

11:14 AM Jan 26, 2024 IST | Web Editor
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்   மாநிலம் முழுவதும் ஒலித்த கண்டன குரல்கள்
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மீது மர்ம நபர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு. இவர் நேற்று முன்தினம் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும், மற்ற நேரங்களிலும் மர்ம நபர்கள் சிலர் இவரை நோட்டம் விட்டுள்ளனர். மேலும் இவரைப் பற்றிய தகவல்களையும் விசாரித்துள்ளனர்.

தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் கூறிய நேசபிரபுவிடம், நேரில் வந்து புகார் அளிக்கும்படியும், போதிய காவலர்கள் இல்லை என்றும் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று, மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டுள்ளார். அவ்வாறு காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை அறிந்த நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும் மெத்தனப்போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தயது. இதனைத் தொடர்ந்து, நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்களும், அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் :விழுப்புரம் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தைச் சேர்ந்த காட்சி ஊடகம் மற்றும்
அச்சு ஊடகம் ஆகிய இரு ஊடகப்பிரிவினரும் ஒட்டுமொத்தமாக இணைந்து திருப்பூர்
மாவட்டம் பல்லடம் நியூஸ்7 செய்தியாளர் நேச பிரபுவை தாக்கிய ரவுடிகள் மீது
நடவடிக்கை எடுக்க கோரி பேரணியாகச் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் தகவல் தெரிவித்தும், விரைவான நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் மீதும் நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தனர். சுமார் 75-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் காவல் நிலையத்தில் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அனைத்து பத்திரிகையாளர்களும் தங்கள் நெஞ்சில் கருப்பு பேட்ச் அணிந்து பேரணியாக சென்றது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் :செய்தியாளர் நேசப்பிரபு மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதலுக்குள்ளான சம்பவத்தை கண்டித்து பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று 12 மணி அளவில் பெரம்பலூர் செய்தியாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தேசத்தின் நான்காவது தூணான பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி செய்தியாளர்களுக்கு உரிய
பாதுகாப்பு வழங்க வேண்டும். திருப்பூர், பல்லடம் செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என
கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் :

நியூஸ்7 தமிழ் பல்லடம் செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து ராமநாதபுரம்
செய்தியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.செய்தியாளர் நேசப்பிரபு சமூக விரோதிகளால் கொடூரமான ஆயுதங்களால் தாக்கப்பட்டு, உயிருக்கு போராடிவரும் நிலையை உருவாக்கிய சமூக விரோதிகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
முன், ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் செய்தியாளர்களை வரைமுறைப்படுத்தி சமூக விரோதிகள் தாக்கப்படுவதை மத்திய, மாநில அரசாங்கம் உடனடியாக தலையிட்டு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தவறு செய்தவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அல்லது குண்டர்  தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் குடும்பத்தோடு போராடுவோம் என கூறினர்.

கோவை மாவட்ட செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் :கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு, கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசாங்கம் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும், முன்கூட்டியே நேசபிரபு காவல்துறையினருக்கு தகவல் அளித்தும் அலட்சியமாக இருந்த காமநாயக்கன்பாளையம் காவலர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

விழுப்புரம் :

செய்தியாளர் நேசப்பிரபு மர்ம கும்பலால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வாயிலில், விழுப்புரம் பத்திரிக்கையாளர் சங்க தலைவர் சீத்தாராமன் தலைமையில் பத்திரிக்கை மற்றும் செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டுமெனவும், செய்தி மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததற்கும், இழப்பீட்டு தொகை ரூ.3 லட்சம் அறிவித்ததற்கும் நன்றி தெரிவித்தனர். மேலும் சிகிச்சை பெற்று வரும் செய்தியாளருக்கான மருத்துவ செலவை தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டுமெனவும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

குளித்தலை, கரூர் மாவட்டம் :

கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பாக தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நல சங்கத்தினர் மற்றும் அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிருபர் நேச பிரபுவை செய்தி சேகரிக்க சென்ற பொழுது கொலைவெறி தாக்குதல் நடத்திய குண்டர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக தமிழ்நாடு அரசு ரூபாய் ஒரு கோடி வழங்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு அளிக்கவும், இதுபோன்ற கொலைவெறி தாக்குதல் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டனம் முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை :

மதுரை செய்தியாளர் சங்கம், தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும்
ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் 100 க்கும் மேற்ப்பட்ட செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேசபிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்த வேண்டும், நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை ஆர்ப்பாட்ட முழக்கங்களாக எழுப்பினர்.

மேலும், மதுரை செய்தியாளர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வாயிலாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அக்கடிதத்தில்,  "பத்திரிக்கை துறையினருக்காக பணி பாதுகாப்பு மசோதாவை அமுல்படுத்த வேண்டும், தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மட்டுமல்லாது குற்றத்திற்கு பின்புலத்தில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும்" என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் :

செய்தியாளர் நேசபிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனடியாக
கைது செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு மசோதாவை
அமல்படுத்த வேண்டும், நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரியை பணியிடை
நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல்நிலையம் அருகே நேசனல் ஜெர்னலிஸ்ட் யூனியன் சார்பில் செய்தியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் :நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம் மற்றும் சிவகங்கை மாவட்ட பத்திரிக்கையாளர் நல சங்கம் சார்பில் சுமார் 30க்கும்
மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் உரிய
நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் :

செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மட்டும் ஊத்தங்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரையில் உள்ள 50க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கருப்பு பட்டை அணிந்து கலந்துகொண்டனர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு
தாக்கப்பட்டதை கண்டித்தும், செய்தியாளரை தாக்கிய சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியாளரின் முழு மருத்துவ
செலவையும் அரசே ஏற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க
வேண்டும். குறிப்பாக, இதுபோல ஒரு சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க
செய்தியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் பணி பாதுகாப்பு
சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பொன்னமராவதி :பல்லடத்தில் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபுவை தாக்கிய குண்டார்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொன்னமராவதி பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னமராவதி பத்திரிக்கையாளர் சங்க தலைவர் முருகேசன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்தும் பத்திரிகையாளர்களை தாக்கிய கயவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷமிட்டனர்.

இதேபோல் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் மன்றங்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

Tags :
Advertisement