நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் - மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம்
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நமது நியூஸ் 7 தமிழ் செய்திக் தொலைக்காட்சியின் செய்தியாளராக கடந்த ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் இன்று செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். வழக்கம் போல இரவில் வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் அவரை நோட்டமிட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது.
இதனைத் தொடர்ந்து வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செய்தியாளர் நேசப் பிரபுவை தகவலறிந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் அவரை மீட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக தாக்குதலுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2 கைகள் மற்றும் நெஞ்சுப் பகுதியில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. பல்லடத்தில் குடித்து விட்டு நடுரோட்டில் போலீசாரிடம் தகராறு செய்ததை, நியூஸ்7 தமிழில் செய்தி வெளியிட்டது; செய்தி வெளியானால் உன்னைக் கொன்றுவிடுவேன் என மர்ம நபர்கள் மிரட்டிய நிலையில் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது அரிவாளால் வெட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீதான கொலை வெறி தாக்குதலுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..
” பல்லடம் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேசபிரபு, தன்னை சிலர் பின் தொடர்வதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார் . இருந்தபோதும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது
இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும். நேசபிரபுவின் புகார் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்தார்களா? என்பதையும் விசாரிக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் “ இவ்வாறு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.