பெட்ரோல் பங்க் மேனேஜர் கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மகன் சங்கிலி பாண்டி (29). இவர் கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சங்கிலிப்பாண்டி இன்று அவரது வீட்டில் இருந்து கடம்பூருக்கு தனது மோட்டார் பைக்கில் சென்றுள்ளார். அப்போது கடம்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஒரு கார் மோதியுள்ளது.
இதில் நிலைதடுமாறிய சங்கிலிபாண்டி அங்குள்ள காட்டுபகுதியில் விழுந்துள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய சிலர் சங்கிலிபாண்டியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் சங்கிலிப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கயத்தார் போலீசார் சம்பவ இடத்திக்ர் வந்து சங்கிலிப்பாண்டி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காரையும் பறிமுதல் செய்தனர். முன்விரோதம் காரணமாக சங்கிலிப்பாண்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கார் மோதி சங்கிலிபாண்டி இறக்கவில்லை என்பதால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு மர்ம கும்பல் தப்பியோடி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.