ஹர்தீப் நிஜ்ஜார் கொலை | 3 இந்தியர்களைக் கைது செய்து கனடா போலீசார் விசாரணை!
கனடாவில் பிரபல சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியா கனடா இடையே பல காலமாக இருந்த நல்லுறவு கடந்தாண்டு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இப்போது நடக்கும் சம்பவங்களும் இரு நாட்டு உறவுக்கு மேலும் பாதிப்பதாகவே இருக்கிறது.
அதாவது கனடாவில் இருந்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்தாண்டு சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் இந்தியா கனடா உறவும் கூட மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டையும் இந்தியா மொத்தமாக நிராகரித்தது.
இதற்கிடையே ஹர்தீப் சிங் கொலை தொடர்பாகக் கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங், (28) ஆகிய மூன்று பேரை கனடா போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மூன்று பேரும் ஆல்பர்ட்டா என்ற பகுதியில் வசிக்கும் non-permanent residents என்றும் விசாரணை அதிகாரி மன்தீப் முகர் தெரிவித்தார். அவர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் அந்த மூன்று பேருக்கும் ஒருவரை மற்றொருவருக்குத் தெரியாதாம். இதற்கிடையே இந்திய அரசுடன் அவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். கொலை விசாரணையும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் உதவி ஆணையர் டேவிட் டெபூல் தெரிவித்தார்.