தொக்கம் எடுத்தலின்போது பக்கவிளைவு ஏற்பட்டால் கொலை வழக்கு - விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
அறிவியலுக்கு புறம்பாக தொக்கம் எடுத்தல் பேய் ஒட்டுதல் போன்ற தவறான சிகிச்சையில் ஈடுபடுவதில் பக்க விளைவுகள் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சிசு மரண தணிக்கையில் தொக்கம் எடுத்தல் மற்றும் அறிவியல் ஆதாரமற்ற செயல்களால் மரணங்கள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வகை சிகிச்சை முறைகள் விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் இல்லாமல் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளாகும் வாய்ப்புகள் உள்ளன.
பெற்றோர்கள் இதனை கருத்தில் கொண்டு உறுதியான மருத்துவ ஆலோசனைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். குறிப்பாக குழந்தைகளின் நரம்பு மண்டலம் சுவாச மண்டலம் பாதிப்பிற்குள்ளாகி குழந்தைகள் பலவீனமடைவார்கள். அறிவியலுக்கு புறம்பாக தொக்கம் எடுத்தல் பேய் ஒட்டுதல் போன்ற தவறான சிகிச்சையில் ஈடுபடுவது, குழந்தைகளுக்கு ஏதேனும் பக்க விளைவுகள், உயிரிழப்பு ஏற்பட்டால் அந்த சிகிச்சையில் ஈடுபடுத்திய நபர்களின் மீதும் உடன் இருப்பவர்கள் மீதும் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றவியல் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.