கிராமம் முழுதும் வீசிய பிரியாணி மணம் - மதுரை முனியாண்டி கோயில் திருவிழா கோலாகலம்..!
மதுரை மாவட்டம் வடக்கம்பட்டியில் உள்ள முனியாண்டி கோயிலில் 89-ம் ஆண்டு பிரியாணி திருவிழாவில் பிரியாணி விருந்து களைகட்டியது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முனியாண்டி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தமிழ்நாடு முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் இந்த கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த மக்கள் வருவது வழக்கம். கோயிலில் மக்கள் என்ன வேண்டிக்கொள்கிறார்களோ, அந்த வேண்டுதல் நிறைவேறிய பின், அதற்கு நேர்த்திக்கடனாக ஆடு, சேவல் போன்றவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
இரவு முழுவதும் நடைபெறும் இந்த திருவிழாவில் வழக்கமாக 5000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்வர். சுற்று வட்டாரத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பிரியாணியை அதிகாலை 5 மணி முதல் பிரசாதமாக வாங்கி தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வர்.