5 மாதங்களிலேயே பிரதமர் மோடி திறந்த "அடல் சேது" பாலத்தில் விரிசல்!
மும்பையில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது குறித்து கடும் விமரிசனம் எழுந்துள்ளது.
மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக் கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு அடல் சேது என்ற பிரம்மாண்ட கடல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ள இந்த பாலம், மும்பை சிவ்ரி பகுதியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது. 2018ஆம் தொடங்கிய இப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது.
ரூ. 17,843 கோடி செலவில் 6 வழிச்சாலையாக மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் திறந்து வைத்தார். இந்நிலையில், திறந்து வைக்கப்பட்ட ஐந்தே மாதங்களில் அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மிக நீண்ட கடல் பாலத்தின் அணுகு சாலை முதலே விரிசல் தென்படுவதாகவும், பாலத்தின் கட்டுமானப் பணிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி உள்ளன.
இதையும் படியுங்கள் : அதிக போதைக்காக விஷச்சாராயத்தில் மினரல் டர்பன்டைன் ஆயில் கலப்பு - குற்றவாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம்!
நாட்டை மற்றும் மாநிலத்தை ஆளும் அரசுகள் இணைந்து நடத்திய ஊழலால் தான் இப்படி நடந்திருப்பதாக மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், விரிசல் ஏற்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
"மகாராஷ்டிர அரசு தனது கஜானாவை நிரப்பிக்கொள்ள இதுபோன்ற ஊழல்களில் ஈடுபடுகிறது. இந்த பாலத்துக்கு முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவரது பெயரால் இந்த அரசு ஊழல் செய்வது துரதிருஷ்டவசமானது"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.