Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

130 ஆவது ஆண்டை கடந்த முல்லைப் பெரியாறு அணை..! வலி நிறைந்த வரலாறும், வாழ்வளித்த அணையும்..!

முல்லைப் பெரியாறு அணை இன்று தனது 130 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இந்த தொகுப்பில் முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்றையும் அதன் அத்தையாவசியத்தையும் பற்றியும் பார்க்கலாம்.
06:22 PM Oct 10, 2025 IST | Web Editor
முல்லைப் பெரியாறு அணை இன்று தனது 130 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இந்த தொகுப்பில் முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்றையும் அதன் அத்தையாவசியத்தையும் பற்றியும் பார்க்கலாம்.
Advertisement

தென் தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான முல்லைப் பெரியாறு அணை இன்று தனது 130 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. உலகில் எத்தனையோ அணைகள் உள்ளன. ஆனால் அணைக் கட்டியவரை தெய்வமாக பாவிக்கும் பழக்கம் உலகில் எங்காவது  உள்ளதா..?. அந்த அணையின் பொறியாளரின் பெயரை தலைமுறைத்தலைமுறையாக பிள்ளைகளுக்கு சூட்டுவார்களா..? அவருக்கு படையல் வைத்து பூசிப்பார்களா.?

Advertisement

மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் இல்லை என்கிற பதில் பூமிப்பந்தின் மற்ற அனைத்து இடங்களில் இருந்தும் வரும் தமிழ்நாட்டைத் தவிர. தமிழ்நாட்டில் அந்த கேள்விகளுக்கெல்லாம் இல்லை என்ற பதில் சொல்லும் வாய்ப்பை மறுத்தவர் கர்னல். ஜான் பென்னிகுயிக். அவர் கட்டியது முல்லை பெரியாறு அணை.

ஒரு சாதாரண அணையை கட்டியவரை ஏன் தென்தமிழகத்து மக்கள் கடவுளாக வழிபட வேண்டும் என்ற கேள்விக்கான பதில் தெரிய வேண்டுமென்றால் அந்த சாசாதரண அணைக்கு பின் உள்ள சரித்திரித்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி காலம் அது. தென் தமிழகத்தை பஞ்சம் வாட்டி வதைத்து கொண்டிருந்தது. தென்னாட்டின் வைகை உள்ளிட்ட முக்கிய நதிகளும் தாகத்தில் தவித்தன. பருவமழையும் பொய்யுறைக்க தண்ணணீர் இன்றி விவசாயமும் செத்துமடிந்தன. உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்ட போதாமை விதை நெல்லை உண்ணும் நிலைக்கு மக்களைத் தள்ளியது. பாண்டிய தேசத்து மக்கள் பஞ்ச பராரிகளாய், ஒட்டிய வயிற்றுடன் காட்சியளித்ததனர். பலர் நிலங்ளை விற்று விட்டு வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.

இந்த நிலையில் தான் இராமநாதபுர மன்னர் சேதுபதி மக்களை காக்க வேண்டி பாசனத் திட்டங்களை மேற்கொண்டார். அப்போது அவர் கண்களில் தென்பட்டது பெரியாறு நதி. மேற்கு தொடர்ச்சி மலையில் உண்டாகி தமிழக எல்லையில் பாய்ந்து அரபிக்கடலில் வீணாக கலக்கும் பெரியாற்றை தென் தமிழகத்திற்கு திருப்பினால் கழனியும் மக்கள் வயிறும் நிறையும் என்று யோசித்தார். 1798ல் தனது தளபதியான முத்து இருளப்பபிள்ளையை அனுப்பி திட்டத்திற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள செய்தார். காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்து சேகரித்து தகவல்களை கொண்டு ஒரு திட்டத்தை தயாரித்தார் முத்து இருளப்பபிள்ளை. ஆனால் அப்போது இருந்த பெரும் நிதிச்சுமையால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த திட்டத்தை சென்னை மாகாண பிரிட்டீஷ் அரசு கையில் எடுத்தது. திட்டமானது பல்வேறு அதிகாரிகளின் கைகளுக்கு மாறியது. ஒருவர் திட்டத்திற்கான செலவு அதிகம் என்றார். ஒருவர் திட்டமே நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என்றார். இறுதியாக ஒரு பிரிட்டீஷ் தலைமை பொறியாளரின் கைகளில் சென்று தேங்கியது திட்டம். அவர் தான் கர்னல் ஜான் பென்னிகுயிக். பிரிட்டீஷ் அதிகாரிகளையே அசரடிக்கும் திட்டத்தை தந்த பென்னிகுயிக்  ஒப்புதலும் பெற்றார்.

அணைக்கட்டும் இடமும் நீர் பிடிப்பு பகுதிகளும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தது. இதனால் சென்னை மாகாண அரசு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அதன்படி 29.10.1886ல் சென்னை மாகாணத்திற்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. ஒப்பந்தத்தின் படி அணை கட்டுமானம் நடைபெறக்கூடிய பகுதியான 8000 ஆயிரம் ஏக்கருக்கான பணமாக ஏக்கருக்கு ஐந்து ரூபாய் என வைத்து, வருட குத்தகையாக 40 ஆயிரம் ரூபாயை பிரிட்டிஷ் அரசு, திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குச் செலுத்தும்.
மேலும் இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

திட்டமும் தயார், அணைகட்ட அனுமதியும் தயார். இனிதான் ஜான் பென்னிகுயிக் முன்பு ஒரு பெரும்பணி காத்திருந்தது. அணைக்கட்டும் பகுதியில் மரம் செடி கொடிகளை வெட்டி கூடாரங்கள் அமைத்தார். ஜெனரேட்டர், இரும்பு படகு, மண்ணள்ளும் இயந்திரம்,வெடி மருந்துகள் போன்ற  முக்கிய கட்டுமான பொருட்களை இறக்குமதி செய்தார். தங்கள் மறுவாழ்விற்காக கட்டப்படும் அணைக்காக தென் தமிழகத்து மக்கள் தாங்களும் ஒரு கை கொடுத்து உதவினர். பிரிட்டிஷ் ராணுவத்தினரும் போர்த்துக்கீசிய தொழிலாளர்களும் கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முல்லைப் பெரியாறு அணையின் கட்டுமான பணிகள் தொடங்கியது. ஆனால் அதற்கு பெரும் தடையாக இருந்தது இயற்கை. அணைக்கட்டும் பகுதி மனித காலடித்தடமே படாத வனாந்திரமாகும். கட்டுமான பொருட்களை அணை கட்டும் பகுதிக்கு கொண்டு செல்வதே பெரும் சவாலாக இருந்தது. காடுகளில் இருந்த விஷப் பூச்சிகள், நச்சுப் பாம்புகள் மற்றும் வனவிலங்குகள் ஆகியவை பணியாளர்களை அச்சுறுத்தின. காலரா,மலேரியா போன்ற நோய்களும் கூட்டு சேர்ந்து கொண்டு அவர்களைக் கொடுமைப்படுத்தியது.

இதனால் அரசு ஆவணங்களின்படி கட்டுமான பணியின் போது பத்திற்கும்,மேற்பட்ட பொறியாளர்களும் 483 தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர். ஆனால் உண்மை கணக்கு இதைவிட கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உயிரிழந்த அம்மக்களின் நினைவை போற்றும் வகையில் அணைப்பகுதிகளிலேயே அவர்களுக்கு கல்லறைகள் அமைக்கப்பட்டன .

பென்னிகுயிக்கிற்கு மற்றொரு பெரும் இடராக வந்தது கனமழை. அணையின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த நேரத்தில் அப்பகுதியில் கனமழை பொழிந்தது. இதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அணை அடித்துச் செல்லப்பட்டது. இது ஒன்றல்ல இரண்டல்ல பலமுறை, பென்னிக்குயிக் அணையை கட்ட ஆரம்பிக்கவும் காட்டாற்று வெள்ளம் அதை அடித்துச் செல்வதுமாக இருந்தது.
அணையின் கட்டுமான செலவுகள் பட்ஜெட்டை தாண்டியது. இதனால் சென்னை மாகாண பிரிட்டிஷ் அரசு அணைக்கட்டும் பணிகளுக்கான நிதியை வழங்க மறுத்தது. ஆனால் பென்னிகுயிக் சோர்ந்து விடவில்லை. சட்டென லண்டன் சென்ற அவர், தன் சொத்தையும் தன் மனைவியின் சொத்தையும் விற்று பெரும் பணத்துடன் இந்தியா திரும்பி கட்டுமான பணியைத் தொடர்ந்தார்.

அணையானது சுண்ணாம்பு மற்றும் சுர்க்கியால் ஆன கலவையால் கருங்கற்களை கொண்டு கட்டப்பபட்டது.

பூமிக்கு மேல் 155 அடி உயரத்தில், 1241 அடி நீளத்தில் அணை கட்டி முடிக்கப்பட்டது. அதேவேளையில் மற்றொரு முக்கிய பொறியாளரான லோகன் அணைப்பகுதியிலிருக்கும் நீரினை 6100 அடி நீளமுள்ள கால்வாய் மூலம் தேக்கடிக்கு கொண்டு வரும் பணியையும் அங்கிருந்து 5704 அடி நீளமுள்ள குழாய்கள் மூலமாக தமிழகத்தின் பகுதிக்கு கொண்டு வரும் பணியையும் செவ்வனே செய்து முடித்தார். அணையின் இறுதி கட்டப் பணிகளும் நிறைவடைய அணைத் தயாரானது.

சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு 1895 அக்டோபர் 10ம் தேதி இதே நாள் அணையை திறந்து வைத்தார்.

பாலைவனமாகிக் கொண்டிருந்த தென் மாவட்டங்கள் சோலை வனமாகின. பஞ்சத்தால் மடிந்த மக்கள் பசியாறினர். மாற்றிடம் பெயர்ந்தவர்கள் சொந்த ஊரில் விவசாயிகளாகவும், விவசாயத் தொழிலாளர்களாகவும், நில உரிமையாளர்களாகவும் மாறினர். மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது.

இந்த அணை நீரால், இன்று ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வேளாண் உற்பத்தி நடைபெறுகிறது. 2.13 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தினசரி 80 லட்சம் மக்கள் குடிநீர் வசதி பெறுகின்றனர்.
ஒரு தலைமுறையின் வாழ்வையே மாற்றி அமைத்த பெரும் புகழுக்குச் சொந்தக்காரரானார் ஜான் பென்னிகுயிக். ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்கிறது தமிழ்மறை. கர்னல் ஜான் பென்னிகுயிக்  மக்களின் வாழ்வை மீட்டுத் தரும் பெரும் பணியைச் செய்து வாழ்வாங்கு வாழ்ந்தார். அதனாலயே தென் தமிழகத்து மக்கள் அவரை கடவுளாக பாவிக்கின்றனர்.

அவர் செய்த பெரும்பணியான முல்லைப் பெரியாறு அணை இன்று தனது 130 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. முல்லைப் பெரியாறு அணையானது இன்றும் தென் மாவட்ட மக்களின் தாயாககம்பீரமாக நிற்கிறது. என்றும் நிற்கும்.

Tags :
999John PennycuickMullaiPeriyarDamMullaiPeriyarDam130MullaiPeriyarDamhistorysouthtamilandustrugglestoryofmullaiperiyardam
Advertisement
Next Article