முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் - தமிழ்நாடு மற்றும் கேரள அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய மேற்பார்வை குழு கடிதம்!
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மரங்கள் வெட்டுதல், மழைப் பொழிவு கண்காணிப்பு மையம் அமைத்தல், அணை பராமரிப்பு உள்ளிட்ட உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, நிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழு கடிதம் அனுப்பியுள்ளது.
மாநில அரசுகள் சார்பாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை ஆய்வு செய்து இருதரப்புக்கும் ஏற்ற சமூக தீர்வைக் கண்டறிய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 19 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு மேற்பார்வை குழு தவைவர் அனில் ஜெயின் கடிதம் எழுதியுள்ளார்.
ஒரு வார காலத்திற்கு மேற்பார்வை குழு கூட்டம் நடத்தி பிரச்சனைகளுக்கு சமூகத்தீர்வு காண உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் கூட்டம் டெல்லியில் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய அணைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.